Tuesday, October 29, 2013

பாலகிட்டு

எப்போதுமே அம்மா போட்டுக்கொடுக்கும் "டீ" யில் நிறம், மனம், சுவை... இதையும் தாண்டி  என்னமோ இருக்கிறதா,  நா , அக்கா, தங்கை, மூவருமே டீ டம்ளரை வாயில் வைத்தபடி அம்மாவுக்குத் தெரியாமல் கண்களால் பேசிக்கொள்வதுண்டு. அந்த "டீ" யில் அம்மாவின் கை பக்குவத்தையும் தாண்டி, பால் காரர் பாலகிட்டுவின் கைவண்ணமும் கலந்தே இருக்கும் . கறந்த பாலில் அவர் எடை கட்டுமிடம் வீட்டை தாண்டிய குடிநீர்க் குழாய்களாகவும் அவ்வப்போது இருக்கும் என்று நண்பர்கள் கிண்டலடிப்பதுண்டு. "யாரு... பாலகிட்டு ட்டயா பால் வாங்குறிங்க...? ரோட்ல எந்த பைப்படிய பாத்தாலும் பால் கேனோட வர்ற அவரோட சைக்கிள் தானா நின்றுமே..." என்பார்கள். அது உண்மையும் கூட. நானே அவ்வப்போது பார்த்திருக்கிறேன். இது அம்மாவுக்கும் தெரிந்திருக்கிறது என்பது பிரிதொருநாளில் தான் எங்களுக்கும் தெரியும்.

அவர் கொண்டுவந்து கொடுக்கும் பாலில் நிறம், சுவை, திடம். என்று எதுவுமே இருக்காது. என்று அம்மா அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கவும் செய்வாள்.  " அப்புறம் ஏம்மா இவர்ட்ட அந்த தண்ணி பாலையே வாங்குற..." என்று கேட்டால், "வாடிக்கைய வுட்ர கூடாதுடா.... " என்று சொல்வாள். அம்மா அப்படி சொன்னதின் பின்னால் ஒரு மரத்திலிருந்த பூ, பூக்கும் முன்னே உதிர்ந்த செய்தியையும், சாய்ந்த மரத்தையும், அதன் கிளைகளின் சோகங்களையும் மறைத்து வைத்திருந்தாள் என்பதை பின்னாளில் அப்பாவின் மூலமாக தெரிந்து கொண்டோம்.

அம்மா, அப்பாவை கைப்பிடுத்து வந்த நாளிலிருந்தே பாலகிட்டு தான் எங்களது வாடிக்கை பால் காரர்.  என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறோம். அவருக்கான அடையாளம் ஒவ்வொரு தீபாவளிக்கான பிறகும் உடுத்தி வரும் ஏதோ ஒரு கலரிலான சட்டையும் கைலியும் தான். இந்த உடை மறுவருட தீபாவளிக்குத்தான் நிறம் மாறியிருக்கும். மூன்று பெண் குழந்தைகளுக்கு தகப்பன் என்பதால்  தன்னை மட்டும் வறுமைக் கோட்டுக்குள்ளேயே வரைந்து கொண்ட ஒரு பிம்பமாக படிந்திருந்தார் எல்லோரின் கண்களிலும்.

வீட்டின் வெளியிலிருந்தே பால் அளந்து கொடுத்துவிட்டு போகும் அவர், மாதா மாதம் 1 - 5 தேதிகளுக்குள் ஏதேனும் ஒரு நாள் மட்டும் வீட்டின் காலிங் பெல் அடித்து உள்ளே வருவார். கையில் ஒரு துண்டு பேப்பர் வைத்துகொண்டு அதை அம்மாவிடமோ, அப்பாவிடமோ நீட்டுவார். அந்த சீட்டில் C.R.C . என்று தலைப்பிட்டு அவரது புரியாத கையெழுத்தில் ஏதோ கணக்குகளை எழுதியிருப்பார்.  C.R.C. என்பது என் அப்பா வேலை பார்த்த போக்குவரத்துக் கழகம் என்பதை அவரின் அடையாளத்திற்காக போட்டிருப்பார். அந்த கணக்குகள் கடந்த மாத பால் பண கணக்காக இருக்கும்.

ஒன்பது வருடங்களுக்கு முன்னர் சூரிய சுழற்சியில் ஆவியாகிக் கொண்டிருந்த மார்கழி மாத காலையில் வழக்கமாக அவர் வரும் 5 தேதி களுக்குள் இல்லாத நாளொன்றில் காலிங் பெல் அடித்து உள்ளே வந்ததும்.  தன்னிடமுள்ள இரண்டு மாடுகள் சினையாக இருப்பதால் மாத வருமானம் சற்றே குறைவாக இருக்கிறது என்று முன்பணம் கேட்டதை அம்மா கொடுத்திருக்கிறாள்.

கூடவே, அவரது கடைக்குட்டி மகளையும் அழைத்து வந்திருந்ததையும், அவளுக்கு மார்கழி மாத கோலம் போடுவது மிகவும் பிடித்த ஒன்று என்றும். அவள் கலர் கோலப்பொடி கேட்டு அழுகிறாள் என்றும் அதை வாங்கிக்கொடுப்பதற்காக அழைத்து வந்ததாகவும் அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார்.

அம்மா அவளிடம் "கலர் கோலம் போடணுமா உனக்கு..." என்று செல்லமாக அவளை கொஞ்சிய படி உள்ளே சென்று தான் வாங்கி வைத்திருந்த கலர் கோலமாவு பாக்கெட்டுகள் சிலவற்றை கொண்டு வந்து கொடுத்திருக்கிறாள்.

அது போதாதென தன் அப்பாவிடம் அடம்பிடித்து அவரது சைக்கிளின் கேரியரிலிருந்து இறங்க மறுத்து அடம் பிடித்தவளுக்கு பின்னால் நடக்கப்போகும் சம்பவம் எப்படி தெரியும்.?

இப்போது அழைத்துப் போகவில்லை என்றால் அதிகாலையில் எப்படியும் அழுது அடம் பிடிப்பாள் என்று தன் சைக்கிள் கேரியரில் அமரவைத்து கடைக்கு அழைத்து சென்றிருக்கிறார் பாலகிட்டு.

சாலையில் சந்தித்த மணல் லாரியிடம் தன் மகளினை பலிகொடுத்து வீடு திரும்பிய அவரிடம், அவரது மனைவி  எந்த வார்த்தயுமோ, சிறு கண்நீருமோ  சிந்தவில்லை. அமைதியாய் இருந்தாள். அவளது அந்த அகால அமைதியை பார்த்துப் பார்த்தே மற்ற இரண்டு மகள்களும் பேரமைதி ஆகிவிட்டனர்.

துன்பம் வரும்போது உடைந்தழாத எல்லா மனமும் பேரமைதிக்குள் ஆழ்ந்து போய்விடும் என்பதன் சான்றாக இருக்கிறது இந்த குடும்பம்.

பாலகிட்டு தனக்குள்ள இரண்டு மாடுகளையும் சேரத்து இரண்டு மகள், மனைவியென எல்லோரையும் கவனித்துக்கொள்ளும் உயிருள்ள சவமாக வாழ்ந்து வருகிறார்.

1 comment:

  1. அமைதியை கடைபிடிக்கச் சொல்லும் ஒரு நல்ல கதை . தொடரட்டும் . வாழ்த்துக்கள் .

    ReplyDelete